Tuesday, October 23, 2012

டெங்கு உயிர் கொல்லி


அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...

மழைக்காலம் தொடங்கி விட்டது .மழையின் ஆரம்பத்திலே நோய் தொற்றுக்களும் பரவத் தொடங்கிவிடும். அந்த வகையில் மழைக்காலத்தில் 
டெங்கு காய்ச்சல் மிகப்பாரிய தாக்கத்தை கடந்த வருடமும் ஏற்படுத்தி சென்றது. எனவே ஆரம்பத்திலே முற்காப்பினை மேற்கோண்டு மேலதிகமாக இடம் பெறும் உயிர் சேதங்களை தவிர்த்துக் கொள்வோம்.

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?
 
டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் என்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும். 

டெங்கு காய்ச்சல் 4 கட்டங்களை கொண்டது

டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு சாதாரண காய்ச்சல், டெங்கு ரத்த போக்கு காய்ச்சல், டெங்கு அதிர்ச்சி நோய் என 3 கட்டங்களை கொண்டது.
டெங்குவின் முதல் கட்டத்தில் காய்ச்சல், தலைவலி, கண் வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். டெங்குவின் 2ம் கட்டத்தில் கண், மூக்கு, நக கண், பல் ஈரலில் இருந்து ரத்தம் வெளியேறும். அதன்பின், உடல் முழுவதும் அரிப்பு ஏற்படும். உடலில் அம்மை போன்று சிறு புள்ளிகள் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும்.

மலம் கருப்பாகவும், சிறுநீர் சிவப்பு நிறத்திலும் போகும். டெங்குவின் கடைசி கட்டத்தில் உடலின் உள்ளேயும், வெளியேயும் ரத்த போக்கு இருக்கும். நினைவுகள் தடுமாறும். சுயநினைவு இழக்கும். அதன்பின், கோமா நிலைக்கு தள்ளப்பட்டும், உயிரிழப்பு ஏற்படும். அதனால், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று கட்டாயம் சிகிச்சை பெற வேண்டும்.


 இந்த கொசு உற்பத்தியாவதை எவ்வாறு தவிர்க்கலாம்?


டெங்கு கொசுக்கள் பகல் நேரங்களில் கடிக்கும். அதிகப்படியாக சூரிய உதயத்தில் இருந்து 2 மணி நேரம் வரையிலும், சூரியன் மறையக் கூடிய மாலை வேளைகளிலும் கடிக்கும். முழுக்கை ஆடைகளையும் நீண்ட ஆடைகளை அணிந்து உடலினை நன்றாக மூடுவதன் மூலம் கொசுக்கடியின தவிர்க்க இயலும். கொசுவலை, கொசுக்களை கொல்லும் காயில் முதலியவற்றை உபயோகிக்கலாம். குழந்தை மற்றும் முதியவர்க்கு உபயோகப் படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். கொசுவர்த்தி மற்றும் மின்சார ஆவியாகக் கூடிய மேட்டுகள் உபயோகப்படுத்தலாம். கொசு வலை பகலில் தடுக்க மிகவும் நல்லது. தற்போது மருந்து உபயோகப்படுத்திய கொசுவலைகள் மலேரியா காய்ச்சல் தடுப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன. டெங்கு நோயாளிக்கு அவற்றைப் பரவச் செய்யாமல் தடுக்க ஏதேனும் அறிவுரை உள்ளதா? டெங்கு காய்ச்சல் அடுத்தவருக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த காய்ச்சல் உள்ள நோயாளி கொசுக்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும். எனவே கொசு விரட்டியை உபயோகிக்கவேண்டும். கொசுவர்த்தி, காயில்கள் போன்றவைகளையும் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் டெங்கு காய்ச்சலை தவிர்க்க முடியும்.

Thursday, July 19, 2012

எங்களாலும் முடியும்.....


அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...

இன்று ஊடகத்தின் வளர்ச்சி எல்லோருக்கும் கிடைக்கும்படியும் அமைந்துவிட்டது, சிறிது தொழில்நுட்பம் தெரிந்தால் கூட நமது கருத்துக்களை உலகத்தின் பலபாகங்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும். ஆனால் இஸ்லாமிய சமுதாயம் ஊடகவலையில் இன்னும் உறங்கி கொண்டுதான் இருக்கிறது. இதனால இஸ்லாம் பல கோணங்களில் தவறாக பரப்பப் படுகிறது, மேலும் கலங்கப் படுத்தபடுகிறது, காரணம் இன்று ஊடகம் ஆதிக்க சக்திகளாலும் பாசிசத்தாலும் ஆக்கிரகிக்கப்பட்டுள்ளது.ஊடகத் துறையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறித்து இதுவரை வெளியிடப்பட்ட அறிக்கையில் ஊடகத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் வெறும் 3 சதவிகிதம் முஸ்லிம்களே உள்ளனர்.

ஒரு புள்ளிவிபரத்தின் படி ஒரு அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்றே முக்கால் மணி நேரம் தொலைக்காட்சியைப் பார்க்கிறான். 65 ஆண்டு கால உலக வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒன்பது ஆண்டுகாலம் தன் வாழ்க்கையை தொலைக்காட்சியை பார்ப்பதில் கழிக்கிறான். அமெரிக்காவில் கணிசமான குழந்தைகள் சராசரியாக வாரம் ஒன்றிற்கு 25 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதாக சி.என்.என் ஹெல்த் நியூஸ் குறிப்பிடுகிறது.

தொலைக்காட்சியானது  சிறியவர் முதல் பெரியவர்வரைக்குமான நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்து ஒவ்வருவரையும் மீள முடியாத தனது பிடிக்குள் சிக்க வைத்திருப்பதை காணமுடிகின்றது.இதன் பிரதிவிம்பத்தையும் நமது பெண்களில் இலகுவாக அறியலாம்.நமது அடிப்படைத்தேவை பூர்த்தியாகாமல் இருக்க முடியும் ஆனால் தொலைக்காட்சி இல்லாத வீடுகள் இல்லை எனலாம்.இப்போது அதன் இடத்தை கணணி,இணையம் பிடித்துக்கொண்டு வருகிறது.

அந்த அடிப்படையில் இன்று ஊடகத்தில் இழிவுபடுத்தப்படும் முஸலிம் பெண்கள் மற்றும் ஊடகங்களால் சீரழியும் முஸ்லிம் பெண்களை பாதுக்க வேண்டி பெண்களால் மட்டுமே நடாத்தப்படும் தொலைக்காட்சி சேவை ஆரம்பமாக போகின்றது.

பெண்களை இஸ்லாம் மேன்படுத்தி உள்ளது.பெண்களுக்கு உச்ச கட்ட சுதந்திரத்தை வழங்கியிருக்கின்றது.ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது வேப்பங்காயாக தான் தெரியும்.முஸ்லிம் பெண்களின் வளர்ச்சியில் அடுத்த மைல் கல் "நிக்காப் அணிந்து பெண்கள் நடத்தும் தொலைக்காட்சி சேவை" 

நிக்காப் அணிந்தா அப்ப எதுக்கு தொலைக்காட்சின்னு நீங்க கேக்குறது புரியுது.
முதலில் நிக்காப் வலியுறுத்தவும், "எங்களாலும் முடியும்" என்பதை காட்டவுமே இந்த சகோதரிகள் ஊடக துறைக்கு முன்வந்துள்ளனர்.



ஊடகங்கள் சாத்தியமில்லாத ஒரு எதிர்பார்ப்பினை பெண்களுக்காக வென்றே சமுதாயத்தில் உருவாக்கி  நிலையில்லாத இஸ்திரத்தன்மையற்ற உண்மைக்கு மாறான நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த நிலையை மாற்றவே றமழானில் எகிப்தில் ஒரு தொலைக்காட்சி புரட்சி ஆரம்பமாகவுள்ளது.
ஜூலை 21, இல்(முழுமையாக முகத்தை முக்காடுஅணிந்துபெண்களால் மட்டுமே முற்றிலும் நிர்வகிக்கப்படும் முதல்எகிப்திய செயற்கைக்கோள் சேனல் ரமலான் புனித நோன்புமாதத்தின் முதல் நாளில் இருந்து ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. 
"மரியா" என்ற புதிய தளத்தில் இவ் தொலைக்காட்சி சேவையானது முற்றிலும் பெண்களால் மாத்திரமே நடாத்தப்பட இருக்கின்றது.அதன் இயக்குனர், தொழில்நுட்ப உதவியாளர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் , பங்குபற்றுனர்கள் அனைவரும் முஸ்லிம் பெண்களாகவும் "நிக்காப்" அணிந்தவர்களாகவுமெ பணியாற்றுவர் என்பது குறிப்பிடதக்கது. 
 இவ் தொலைக்காட்சியின் பொறுப்பாளரான Safaa al-Refaie
"நிக்காப்" என்பது "சிவப்பு கோடு போன்றது அதனை யாரும் கடக்க முடியாது"
(“Niqab is a red line that cannot be crossed,” ) எகிப்தில் வெளிவரும் தினசரி பத்திரிகையான AL-Ahram க்கு தெரிவித்துள்ளார்.மேலும் இவ் தொலைக்காட்சி சேவையை நடாத்துவதற்கான நிதி மூலம் தொடர்பாக வினவிய போது அது தொடர்பான தகவல்கள் எதுவும் அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

"மரியா" என்ற பெயர் முஹம்மது நபியின் மனைவிகளில் ஒருவரின் பெயர் என்பதாலும் என்ற காரணத்தால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய தொலைக்காட்சி சேவையில் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான செய்திகள் மற்றும் திருமண வாழ்வு தொடர்பான விடயங்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்க மாட்டாது.இவ் தொலைக்காட்சி சேவையின் முக்கிய இலக்கானது முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாம் தொடர்பான கல்வி அறிவை போதிப்பது தொடர்பாகவே இருக்கும் 


Safaa al-Refaie அவர்கள் மேலும் குறிப்பிடும் போது " எங்களுடைய செய்தியானது நேரடியாக முஸ்லிம் பெண்களுக்கே உரியதாகும்.அதிலும் குறிப்பாக திருமணம் தொடர்பான விடயங்களை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முறையை (சுன்னாவை) பின்பற்றியதாகவே அமைந்திருக்கும் என்றார்.


இவர் மேலும் கூறுகையில் "கடந்த காலங்களில் நிக்காப் அணிந்த பெண்களை ஊடகங்களில் கொடுமைப்படுதப்பட்டதை இல்லாமல் செய்து அவர்களை கண்ணியப்படுத்தும் நோக்கிலே இவ் சேவையானது ஆரம்பிக்கப்பட இருக்கின்றது"
நிக்காப் என்பது எகிப்து சமூகத்தில் பொதுவானதாக இருந்தாலும்  எகிப்திய தொலைக்காட்சி சேவைகளில் தடுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது.எகிப்திய முன்னாள் ஐனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் காலப்பகுதியில் பெண்தொகுப்பாளர்கள் ஹிஐ◌ாப்புடன் திரையில் தோன்றுவது தடை செய்யப்பட்டிருந்தது.
இவ் தொலைக்காட்சியில் பணிபுரிபவர்களுக்கு 2 விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

1.முழுமையாக பணியாற்றும் போது நிக்காப் அணிவது.
2.நிரலில் தோன்றும் போது மட்டும் நிக்காப் அணிவது.
நிரலில் தோன்றும் போது மட்டும் நிக்காப் அணிவது ஏன் வலியுறுத்தப்படுகின்றது என்றால் குறித்த நிபுணரின் முகம் பிறர் அறியாமல் இருப்பதால் எதிர்காலத்தில் அவர்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கவே ஆகும்.


 Al-Ahram daily's  இணையதளம் இவ் தொலைக்காட்சி சேவை தொடர்பாக குறிப்பிடும் போது  ஆண்கள்  தளத்தில் தோன்றுவதை தடை செய்திருப்பதோடு பணியாற்றுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.நேரடி  நிகழ்ச்சி திட்டங்களின் போது கூட  தொலைபேசி நிரல்களிலும்  பங்கேற்க அனுமதி  இல்லை என்று கூறப்படுகின்றது.

எதிர்கொண்டுள்ள றமழானில் நாம் சிறப்பாக செயற்பட இவ் தொலைக்காட்சி சேவை நமக்கு துணைபுரியவும், இவ் சகோதரிகளின் முயற்சிக்கு அல்லாஹ் துணை இருக்கவும் பிரார்த்தனை செய்வோம்..



உங்கள் சகோதரி 
பஸ்மின் கபீர் 
குறிப்பு:-  (இக் கட்டுரை எழுதுவதற்கு தூண்டிய ஆமீனா சகோதரிக்கும் ஜெய்லானி சகோதரருக்கும் ஐஸாக்கல்லாஹைரன்)

Monday, July 9, 2012

ஸகாத் ஏன் எதற்காக கொடுக்க வேண்டும்?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.
1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது. 2. தொழுகையை நிலை நிறுத்துவது. 3. (கடமைப்பட்டவர்கள்) ஸகாத் வழங்குவது. 4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமளானில் நோன்பு நோற்பது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) (நூல்: புகாரி 8)


ஒருவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவனுக்குத் தொழுகை எப்படி கட்டாயக் கடமையாகி விடுமோ அது போல் ஸகாத்தும் கட்டாயக் கடமையாகி விடும். அவன் கண்டிப்பாக தன்னுடைய செல்வத்திலிருந்து ஸகாத்தை கணக்கிட்டு வழங்கியாக வேண்டும். முஆத் (ரலி) அவர்களை நபியவர்கள் யமன் தேசத்திற்கு ஆளுநராக அனுப்பும் போது இந்த உபதேசத்தைச் செய்தே அனுப்பி வைக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதி மொழியின்பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1395


ஸகாத்தின் முக்கியமான நோக்கம் வறுமையை இல்லாமல் ஆக்குவது தான் என்பதை முஆத் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் செய்த உபதேசத்திலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. செல்வத்தில் ஸகாத் தவிர வேறு கடமையில்லை ஸகாத் என்ற அற்புதக் கடமை வறுமை ஒழிப்பிற்குரிய ஒரு அற்புத ஆயுதமாகும். இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தித் தான் நபியவர்கள் வறுமையை விரட்டியடித்தார்கள். நபியவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் வறுமையை இல்லாமல் ஆக்கிக் காட்டினார்கள். 

ஒருவன் அல்லாஹ்வை ஈமான் கொண்டிருக்கின்றான் என்பதற்குரிய அடையாளங்களில் ஒன்று ஸகாத்தை நிறைவேற்றுவதாகும். ஒருவனிடம் செல்வ வசதி இருந்தும் அவன் ஸகாத்தை நிறைவேற்றவில்லை என்றால் நிச்சயமாக அவனிடம் இறை நம்பிக்கை இல்லை என்பதற்கு அதுவே தெளிவான சான்றாகும். இதோ நபி (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வை நம்பிக்கை (ஈமான்) கொள்வது என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சான்று பகர்வதும், தொழுகையை நிலை நாட்டுவதும், ஸகாத் கொடுப்பதும், போர்ச் செல்வங்கல் ஐந்தில் ஒரு பங்கை (அரசு பொது நிதிக்கு) வழங்குவதும் ஆகும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 7556
ஒருவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவனுக்குத் தொழுகை எப்படி கட்டாயக் கடமையாகி விடுமோ அது போல் ஸகாத்தும் கட்டாயக் கடமையாகி விடும். அவன் கண்டிப்பாக தன்னுடைய செல்வத்திலிருந்து ஸகாத்தை கணக்கிட்டு வழங்கியாக வேண்டும். முஆத் (ரலி) அவர்களை நபியவர்கள் யமன் தேசத்திற்கு ஆளுநராக அனுப்பும் போது இந்த உபதேசத்தைச் செய்தே அனுப்பி வைக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதி மொழியின்பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1395

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாட்டில் அரசாங்கமே முஸ்லிம்களிடமிருந்து ஸகாத்தை வசூலித்து விடும். ஆனால் ஒரு முஸ்லிம் இஸ்லாமிய ஆட்சி நடைபெறாத இடத்தில் இருந்தாலும், ஸகாத்தை வசூலிப்பதற்கு யாருமே இல்லையென்றாலும் அவனே முன்வந்து ஏழைகளுக்குரிய ஸகாத்தை வழங்கிவிட வேண்டும். இதிலிருந்து இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாட்டில் வாழ்பவர்களுக்கும் ஸகாத் கடமை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். மலை உச்சியில் இருந்தால் கூட ஸகாத்தை கட்டாயம் நிறைவேற்றிவிட வேண்டும்.
அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் தாம், உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு, அவர்களின் இறைவனிடம் பல பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு. அல்குர்ஆன் 8:3, 4
இவ்வுலக வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை மறுஉலக வாழ்வில் ஈடேற்றத்தை அளிக்கும்.
அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜில் உரையாற்றும் போது நான் செவியுற்றேன். அவர்கள் கூறினார்கள்: (மக்களே) உங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள். உங்களுடைய ஐந்து (நேரத் தொழுகைகளை) தொழுது கொள்ளுங்கள், உங்களுடைய (ரமலான்) மாதத்தில் நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள், உங்களுடைய செல்வத்தின் ஸகாத்தை நிறைவேற்றுங்கள், உங்களில் அதிகாரமுடையவர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு) கட்டுப்படுங்கள், உங்களுடைய இரட்சகனின் சொர்க்கத்தில் நீங்கள் நுழைவீர்கள். நூல்: திர்மிதி 559

சகோதரர்களே! நோன்பு காலம் நெருங்கி விட்டது ஏழைகளின் பசியையும் , வறுமையையும் உணர்ந்து கொள்ள இதை தவிர வேறு சந்தர்பம் நமக்கு இல்லை... தயாராகுங்கள்..

வஸ்ஸலாம்
உங்கள் சகோதரி 
பஸ்மின் கபீர் 






Thursday, June 14, 2012

இஸ்லாத்தின் அடிப்படையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் வழிமுறைகள் .பாகம் - 02

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

குழந்தைகளை பயிற்றுவிக்கும் முறைகளில் அடுத்த முறைகள் தொடர்பாக இங்கு  நோக்கலாம்.

3. வெகுமதியும் தண்டனையும்:-

இந்த வழிமுறையானது குழந்தைகளை சீர்திருத்துவதையும் அதன் நடத்தையை நெறிப்படுத்துவதையுமே இலக்காகக் கொண்டுள்ளது. பிள்ளையைப் பழிவாங்குவதோ, குற்றங்காண்பதோ, மிரட்டுவதோ இதன் நோக்கமன்று .இங்கு வெகுமதியும் தண்டனையும் பிள்ளையை சீர்திருத்தவும், தகாத நடவடிக்கையை மாற்றியமைக்கவும், நல்ல செயல்களை ஊக்கப்படுத்தவும்  உதவும் வழிமுறைகளில் ஒன்று.தண்டிப்பதற்கு முன்னால் குழந்தையின் இயல்பை அறிந்திருப்பது அவசியமாகும்.

இமாம் கஸ்ஸாலி தனது "இஹ்யா"வில் பிள்ளையை பயிற்றுவிப்பவரை மருத்துவருக்கு ஒப்பிடுகின்றார்.
 "பிள்ளையிடம் ஒரு நற்பண்பு காணப்படும் போது அதனைப் பாராட்டுவதும், அதற்கு பரிசு வழங்குவதும் பலருக்கு முன்னால் அதனை புகழ்வதும் அவசியமாகும்.பிள்ளை இதற்கு முரணாக நடந்துவிட்டால் அதனை பெரிதுபடுத்தாது, அதன் குறையைக் கூறி அவமானப்படுத்தக்கூடாது.மீண்டும் மீணடும் அந்த தவறை செய்தால் இரகசியமாக அதனை தண்டிக்க வேண்டும்"
குழந்தை நற்செயல் செய்தால் வெகுமதி கிடைக்கும் என்பதையும் அளவோடு கையாள வேண்டும்.இந்த நிலை அதிகரித்தாலும் ஆபத்து.எதிர்பார்ப்பு அதிகமாகி கிடைக்காத சந்தர்பத்தில் குழந்தை ஏமாந்து போக வாய்ப்புண்டு..அதே நேரம் தண்டனை வழங்கும் போது பாரதூரமாக நடந்து கொள்ளாது கண்ணியமான முறையில் நடந்து கொள்ளவேண்டும்.

4. கதை கூறுதல்:-

பேராசிரியர் அப்துர் ரஷீத் கூறும் போது "கதைகூறுதல் பிள்ளைகளை பயிற்றுவிக்கும் முறைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் முறையாகும் " என்கிறார்.கதையின் இயல்பு, மையக்கருத்து என்பவற்றை அடிப்படையாக கொண்டே அது குழந்தையிடம் நேர்நிலையான அல்லது மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.குழந்தைகளின் நடத்தையை நெறிப்படுத்துவதிலும், ஒழுக்கத்தை வலியுறுத்துவதிலும், கற்பனை ஆற்றலை வளர்பதிலும், ஆளுமை விருத்தியிலும் கதை பாரிய செல்வாக்கை கொண்டுள்ளது.கதையை தெரிவு செய்யும் போது ஆழமாக யோசித்து பின் கூறவேண்டும்

துப்பறியும் கதைகள், ஐதீக கதைகள், மூடநம்பிக்கையை வளர்க்கும் கதைகளை தவிர்த்து.இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் நபிகளாரின் வாழ்க்கை முறைகள்..சஹாபா தோழர்களின் தியாகம், இஸ்லாம் வளர்ந்து வந்த பாதை என்ற ரீதியில் கூறும் போது குழந்தைகள் சிறுவயதில் இருந்தே இஸ்லாமிய சூழலில் வளர வாய்ப்புள்ளது..

எளிய மொழியில், இனிய சொல்நடையில் கதைகூறுதல் அவசியமானது..குழந்தையின் விருப்பம், மனநிலையின் அடிப்படையில் கதைகூற வேண்டும்.எதையும் திணிக்க வேண்டாம்...
5. பழக்கத்தின் மூலம் பயிற்றுவித்தல்  :-

இறுதியான வழிமுறையாக பழக்கத்தின் மூலம் பயிற்றுவித்தல்  என்பது இளவயதில் கிடைக்கின்ற வாழ்க்கை அனுபவங்களே வாழ்க்கை முழுவதற்கு தொடரும்.இதற்கு ஒரு பழமொழியும் உண்டு."தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்" பேராசிரியர் முஹம்மத் குத்ப் கூறும் போது " பழக்கத்தின் மூலம் பயிற்றுவித்தல் சில குறிப்பிட்ட விடயங்களை தொடந்து வழிகாட்டும் போது அதனை குழந்தைகள் இலகுவாக பின்பற்றுவர்"

இஸ்லாமிய பயிற்சி கோட்பாட்டின் படி பழக்கத்திற்கு சிறந்த உதாரணம் வணக்க வழிபாடுகளை பயிற்றுவித்தலாகும்.சிறிய வயதில் இப்பழக்கத்தை ஏற்படுத்துவது எளிது.இறைதூதர் (ஸல்) பொறுப்புக்களை ஏற்கும் பருவத்திற்கு முன்னரே பிள்ளைகளை தொழுகைக்குப் பழக்குமாறு ஏவினார்கள்.பின் அது அன்றாட பழக்கமாக மாறிவிடும்.

"ஏழுவயதாகும் பிள்ளைகளுக்கு தொழும்படி ஏவுங்கள், பத்து வயதாகும் போது அதற்காக அடியுங்கள்"

இதே போன்று பல விடயங்களை பழக்கத்திற்கு கொண்டு வரலாம்.சிறுவயதிலேயே ஹிஐ◌ாப் அணிய பழக்கினால் பருவமடைந்தபின் சடங்காக அணியும் நிலை தொடராது.எந்தவொரு விடயமும் இறைவனின் கட்டளை என்பதை பிள்ளைகளுக்கு பழக்கிவிட்டால் யார் சொன்னாலும் பின் அதில் மாற்றம் ஏற்படாது...

எனவே மேற்குறிப்பிட் வகையில் எமது பிள்ளைகளை சிறய விடயங்களில் கூட அக்கறை கொண்டு கவனிப்போமானால்  நல்ல தலைவர்கள் நமது வீட்டிலேயே உருவாகி விடுவார்கள்.இன்ஷா அல்லாஹ் நாமும் இதனை பின்பற்றி நடந்தால் நாளை மறுமையில் அல்லாஹ;விடத்தில் எமது பொறுப்புக்கள் தொடர்பாக தயக்கமின்றி பதிலளிப்பதோடு அல்லாமல் குடும்பத்துடன் சுவனம் புகலாம்..

வஸ்ஸலாம்..

உங்கள் சகோதரி
பஸ்மின் கபீர்

பாகம் --01

இஸ்லாத்தின் அடிப்படையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் வழிமுறைகள்


Monday, June 11, 2012

இஸ்லாத்தின் அடிப்படையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் வழிமுறைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

18:46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.
குழந்தைகள் வாழ்க்கையின் வரப்பிரசாதங்கள்..தனிமையை போக்கி எமது வாழ்வையே அழகுபடுத்துபவர்கள் குழந்தைகள் தான்.இருந்தாலும் அவர்களின் வாழ்வை அழகு படுத்தும் பொறுப்பை அல்லாஹ் ஒவ்வொரு பெற்றோருக்கும் வழங்கியுள்ளான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே, தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானனின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.
(அறிவிப்பவர்:இப்னு உமர்(ரலி), நூல்: புஹ்காரி 2409)

குழந்தைகளை பயிற்றுவிப்பது என்பது கற்றல் நடவடிக்கை மட்டும் தான் என்பது அனேக பெற்றோர்களின் எண்ணம்.ஆனால் பிள்ளைகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் பயிற்றுவிப்பது பெற்றோரின் கடமையாகும். பயிற்றுவித்தல் வழிமுறைகள் பல வகைப்படுகின்றன.அவற்றில் சில



  • வழிகாட்டல்
  • உபதேசம்
  • வெகுமதியும் தண்டனையும்
  • கதை கூறுதல்
  •  பழக்கத்தின் மூலம் பயிற்றுவித்தல்  

1. வழிகாட்டல்:-

வழிகாட்டல் மூலம் பயிற்றுவித்தல் என்பது ஏனைய வழிமுறைகளை விட சிறந்த வழிமுறையாகும். வழிகாட்டல் மூலம் பயிற்றுவிப்பதை இஸ்லாம் மிக உயர்ந்த வழிமுறையாகக் கருதுகின்றது.அடிப்படையிலேயே குழந்தைக்கு வீட்டில் இஸ்லாமிய ரீதியில் வழிகாட்டலை வழங்க வேண்டும்.
இஸ்லாமிய ஆளுமைகளுடன் பிள்ளை வளர வேண்டுமாயின் குடும்பம் தூய இஸ்லாமிய பண்புகளுடன் இருக்க வேண்டும்.அதற்கு அடிப்படை சத்திய வாக்காக குர்ஆனும் நடமாடும் சத்தியமாக முஹம்மத் (ஸல்) அவர்களும் இருந்தார்கள்.
33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
எனவே குழந்தைகளுக்கு வழிகாட்டும் போது  குர்ஆனையும், முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை மாதிரியையும் வழிகாட்டலாக கொண்டால் உங்கள் பிள்ளைகளின் வாழ்வு சுபீட்சம் காணும்.

2.உபதேசம்:-

நல்ல உபதேசம் மனித உணர்வுகளை உசுப்பி விடுகின்றது.முன்மாதிரியான வழிகாட்டலுக்கு வெறும் உபதேசம் மட்டும் அதிக பலனளிப்பதில்லை.சிறந்த வழிகாட்டலுடன் உபதேசமும் இடம் பெறுமானால்  அது மனித உள்ளத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.குழந்தைகள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்கும் முன் உயர் ஒழுக்கங்களை புரிய வைக்க உள்ளத்தை தொடும் உபதேசம் அவசியமாகின்றது.இத்தகைய உபதேசங்கள் அல்குர்ஆனில் அதிகமாக காணப்படுகின்றன..
அவற்றுள் லுக்மான் தனது மகனுக்குச் செய்த உபதேசம் நினைவை விட்டு அகலாத உபதேசம்.....

31:13. இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).
31:14. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

இஸ்லாத்தின் அடிப்படையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் வழிமுறைகள் தொடரும் ........

உங்கள் சகோதரி
பஸ்மின் கபீர்

.பாகம் --02

இஸ்லாத்தின் அடிப்படையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் வழிமுறைகள் .பாகம் - 02


 




Wednesday, May 30, 2012

அல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்

டாக்டர் கீத் மூர் (Dr.Keith More) உலகப் பிரசித்திபெற்ற ஒரு முளையவியற்துறைப்(கருவியல்) பேராசிரியர். இவர் கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் உடற்கூற்று மற்றும் முளையவியற்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய இந்த அறிவியல்பூர்வமான ஆய்வானது, தனிப்பட்ட ஒருவரால் ஆய்வு செய்து எழுதப்பட்ட சிறந்த நூலாக, அமெரிக்காவில் உள்ள இதற்கான சிறப்பு ஆய்வுக் குழுவில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டாக்டர். கீத் மூர் அவர்கள் கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள டொராண்டோ பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும், மருத்துவத் துறைப்பிரிவில் அடிப்படை அறிவியல் (Basic Science) பிரிவில் உதவித் தலைவராகவும், உடற்கூறு இயல் (Anatomy) துறையில் 8 ஆண்டுகள் சேர்மனாகவும் பணிபுரிந்துள்ளார். 1984-ல் கனடாவின் உடற்கூறு இயல் துறை அசோஸியேஸனின் சிறப்பு விருதான J.C.B. விருதை, டாக்டர். கீத் மூர் அவர்களின் உடற்கூறு இயல் ஆய்வுக்கான சிறப்பு விருதாக வழங்கி கவுரவித்துள்ளது. உலக அளவில் பல்வேறு அஸோஸியேஸன்களையும் குறிப்பாக அமெரிக்க மற்றும் கனடாவின் உடற்கூறு இயல் மற்றும் பல்வேறு ஆய்வுப் பிரிவுக் கவுன்சில்களையும் வழி நடத்திச் சென்ற பெருமையும் இவருக்கு உண்டு. 


ஒருமுறை அரபு மாணவர்கள் சிலர் இவரிடம் முளையவியல் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களைத் திரட்டி அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து அவரிடம் கொடுத்துவிட்டு அவை பற்றிய தெளிவை ஆய்வுமூலம் விளக்குமாறு அவரிடம் வேண்டிக்கொண்டனர்.




மருத்துவ விஞ்ஞானம் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக மார்தட்டிக்கொண்டாலும் மனித உடலில் விடைகாண முடியாத, கண்டறியப்படாத அபூர்வ அம்சங்கள் பல இருக்கின்றன என்பதை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர்.
அந்தவகையில் அன்றைய மருத்துவ விஞ்ஞானம் கண்டறியாத கருவியல் தொடர்பான உண்மைகளைக் கூறும் முக்கியமானதொரு அல்குர்ஆனிய வசனம் Dr.கீத்மூரது கண்களில் பட்டது. ஆழமாகப் படித்தார். ''படைப்பினங்கைளப் படைத்த உமதிரட்சகனின் பெயரைக்கொண்டு ஓதுவிராக! அவன் எத்தகையவனென்றால் அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து மனிதனைப் படைத்தான்'

Dr.கீத்மூருக்கு இவ்வசனம் பெரும் வியப்பையூட்டியது.
''அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும்'' என்ற இவ் விஷயத்தை ஆய்வுசெய்ய முடிவுசெய்த அவர் ஆய்வுகூடத்தை அடைந்து அதி சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டி மூலம் ஒரு கருவின் ஆரம்பப்படிநிலை வளர்ச்சியை ஆய்வு செய்யலானார். அக்கருவின் படத்தை ஒரு அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பு நோக்கினார். என்ன அற்புதம். கருவின் ஆரம்பத்தோற்றமும் அதன் செயற்பாடுகளும் அட்டைப்பூச்சியின் தோற்றமும் அதன் தொழிற்பாடுகளும் ஒரேவிதமாக இருந்தன. ஆரம்ப நிலைக்கரு அட்டைப் பூச்சிபோன்றதென இதற்குமுன் Dr.கீத்மூர் அறிந்திருக்கவில்லை. ஆதனை அல்குர்ஆனிய வசனம் அச்சொட்டாகக் கூறியதைப் பார்த்து வியந்தார். இது இத்துறையில் அவரை மேலும் ஆய்வுகள் செய்யத் தூண்டியது.



அதனைத் தொடர்ந்து ''உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களில் வைத்து அவனே உங்களைப் படைத்தான்.'' என்ற வசனத்தை ஆய்வுக்குட்படுத்தினார். எவ்வித மருத்துவத் தொழில்நுட்பமோ நவீன கருவிகளோ அற்ற 1400 ஆண்டுகளுக்கு முன்பு கருவறையின் படிமுறைச் செயற்பாடுகளைக் கூறியிருக்கும் இவ்வற்புத வசனத்தைக் கண்டு அவர் ஆச்சரியத்திலாழ்ந்தார். அவரது நீண்ட ஆய்வுக்குப்பின் அம்மூன்று இருள்களின் விளக்கம் என்ன என்பதுபற்றி இவ்வாறு விளக்கிக்காட்டினார்.
1) தாயின் அடிவயிறு (Abdominal wall)
2) கருப்பையின் சுவர் (Uterine wall)
3) குழந்தையைச் சுற்றியிருக்கும் சவ்வுப்படலம் (Amniotic Membrane)
இதன்பின்பும் அவர் பல அல்குர்ஆனிய வசனங்களை ஆய்வுசெய்து அற்புதத் தகவல்களை மருத்துவ உலகுக்கு வழங்கினார். இவ்வாய்வுகளில் அவர் ஈடுபட முன்பு ''The Developing Human'' (மனித வளர்ச்சி) என்ற ஒரு நூலை எழுதியிருந்தார். எனினும் அல்குர்ஆனின் முளையவியல் பற்றிய இவ்வசனங்களை ஆய்வுசெய்து பெற்றுக்கொண்ட உறுதியான முடிவுகளைவைத்து அந்த நூலை மீள்பரிசீலனை செய்து 1982ம் ஆண்டு மறுபதிப்பாக வெளியிட்டார். ஒரு தனிநபரால் வெளியிடப்பட்ட சிறந்த மருத்துவ நூல் என்றவகையில் அதற்கு உயர் விருதும் வழங்கப்பட்டது. அந்நூல் பல்வேறு மொழிகளுக்கும் மாற்றப்பட்டு முளையவியல் கற்கையில் முக்கிய பாடநூலாக அங்கீகரிக்கப்பட்டது.
ஆய்வுகள் முடிந்து நூலாக வெளிவரமுன்பு 1981ம் ஆண்டு சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் நடைபெற்ற ஏழாவது மருத்துவ மாநாட்டில் Dr.கீத்மூர் கலந்து உரைநிகழ்த்துகையில் பகிரங்கமாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
''It has been a great pleasure for me to help clarify statements in the Qur'an about human development. It's clear to me that these statements must have come to Muhammad from god because almost all of this knowledge was not discovered until many centuries. Late this proves to me that Muhammad must have been a messenger of the god.'' (Dr. Keith more)


''அல்குர்ஆனில் உள்ள மனித கருவளர்ச்சி பற்றிய தகவல்களை ஆய்வுசெய்து அதனை விளக்கிக்கூற என்னால் உதவ முடிந்ததையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்தத் தகவல்கள் யாவும் இறைவனி (அல்லாஹ்வி)டமிருந்துதான் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வந்திருக்க முடியும் என்று எனக்குத் தெளிவாகியுள்ளது. ஏனென்றால் கருவியல்பற்றிய அறிவார்ந்த ஆய்வு முடிவுகளில் பெரும்பாலனவை பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஆராய்ச்சியே முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனி(அல்லாஹ்வி)ன் தூதர் என்பதை நிரூபித்துவிட்டுள்ளது.'' என்றார். عـلـقة) எனும் அரபிச் சொல்லுக்கு, அதன் அகராதிப் பொருள்படி, ) நிலையிலுள்ள கருவை அட்டைப் பூச்சி (Leech)-ன் புறத்தோற்றத்துடன் ஒப்பீடு செய்வோமானால், உருவ ஒற்றுமையைக் காண முடிகின்றது. (The Developing Human, Moore and Persaud 5th ed., P.08.) மேலும், இந்த அலக்கா (عـلـقة) என்ற நிலையில் கருவானது தாயின் கருவறையில் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையில் தாயின் இரத்தத்தை உறிஞ்சி தன் வளர்நிலைகளுக்கு சக்தியைப் பெற்றுக் கொள்கின்றது. இந்த செயல்பாடு குளத்தில் காணப்படும் அட்டைப் பூச்சியானது பிற பிராணி அல்லது விலங்கினங்களின் தோலின் மேற்பரப்பில் ஒட்டிக் கொண்டு, அந்த பிராணியின் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்வதை ஒத்து இருக்கின்றது*. (Human Development as Described in the Qur'an and Sunnah, Moore and Others. P.36.) மேலும் அலக்கா (عـلـقة) எனும் பதத்திற்கான மூன்றாவது பொருளாக இரத்தக் கட்டி எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. கருவின் ஆரம்ப வளர்நிலையில் அதை நோக்குவோமானால், அதன் புறத் தோற்றமும் அதை மூடி இருக்கும் பை போன்ற சவ்வுத் தோற்றமும், உறைந்த நிலையில் உள்ள இரத்தக் கட்டி போன்ற அமைப்புடன் இருப்பதை காண முடியும். கருவின் ஆரம்ப நிலையில் அதிகப்படியான இரத்த ஓட்டம் கருவின் மீது பாய்ச்சப்படுவதால், அதன் புறத் தோற்றம் உறைந்த நிலையிலுள்ள இரத்தக் கட்டி போன்று தோற்றமளிக்கின்றது.(Human Development as Described in the Qur'an and sunnah, Moore and Others., Page.37-38). மேற்கண்ட அலக்கா (عـلـقة) எனும் அரபிப்பதத்திற்கான மூன்று அர்த்தங்களுமே அது தரும் பொருள்களுக்கான விளக்கத்திற்கு எந்த வித மாறுபாடும் இல்லாமல் ஒத்திருப்பதை நாம் காண முடிகின்றது.கருவின் அடுத்த வளர்நிலையாக முத்கா (مضغة) எனும் அரபிப்பதத்தைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது. முத்கா (مضغة) எனும் சொல்லுக்கு அரபி அகராதியானது பற்களால் மென்று துப்பிய பொருள் (Chewed-like substance) சூவிங்கம் மிட்டாயைக் கடித்து மென்று துப்பும் போது, அதில் பற்களின் வரிகள் பட்டு எவ்வாறு தோற்றம் தருமோ அது போலத் தோற்றத்தை, முத்கா நிலையில் உள்ள கரு தோற்றம் தரும். இது கரு வளர்நிலையில் 28-வது நாளில் தெளிவாகக் காணப்படும். மேலும் பற்களின் வரிகள் போன்ற அமைப்பையும் கருவின் முதுகுப் புறத்தில் தெளிவாகக் காணலாம். (The Developing Human, Moore and Persuad, 5th ed., P.8.)அறிவியல் என்ற துறை இருப்பதையே அறியாத அந்தக் காலத்தில், இன்று இருப்பது போல எக்ஸ்-ரே கருவிகள், CT ஸ்கேன் கருவிகள், நுண் பெருக்கிகள் (Microscope), போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளே இல்லாத, அவற்றை எண்ணிக் கூடப் பார்க்க இயலாத 1400 ஆண்டுகளுக்கு முன் உள்ள சமூகத்தில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு இணையான அறிவியல் கூற்றுக்கு முற்றும் மாற்றமில்லாத வகையில் எவ்வாறு இவ்வளவு தெளிவான முறையில் கரு வளர்ச்சியைப் பற்றிக் கூற முடிந்தது!!! உடற்கூறு இயல் (Anatomy), கருவியல் (Embryology) ஆகிய மருத்துவத் துறையில் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியும் இவற்றில் முனைவர் (P.hd.) பட்டங்களும் பெற்றுள்ள Emeritus Dr. Keith Moore என்பவர் 'மனிதனின் வளர்நிலைகள்' (The Developing Human) எனும் ஆய்வு நூலை எழுதி உள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 8 வெவ்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Dammam) நகரில் நடைபெற்ற 7-வது மருத்தவ கருத்தரங்கில் டாக்டர்.கீத் மூர் அவர்கள் கலந்து கொண்டு பேசும் பொழுது, மனிதனுடைய கருவின் வளர்நிலைகளைப் பற்றி குர்ஆன் கொண்டுள்ள கருத்துக்களை ஆய்வு செய்து உதவுவதில் நான் பெருமைப்படுகின்றேன் என்றார். மேலும் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த அறிவியல் கருத்துக்கள் கொண்ட வசனங்களை கடவுளிடம் இருந்து தான் முஹம்மது அவர்கள் பெற்றிருக்க முடியும். ஏனெனில், அவர்கள் வாழ்ந்து, மறைந்து பன்னெடுங் காலம் வரையும் இதற்கான அறிவும் ஆய்வும் நடைபெறவில்லை. மாறாக, மிக நீண்ட காலத்திற்குப் பின்பே இந்த ஆய்வுகள் யாவும் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆராய்ச்சிகளின் மூலமாக முஹம்மது அவர்கள் இறைவனின் திருத்தூதர் தான் என்பதை உண்மைப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கில வீடியோ பார்க்க இங்கே அழுத்தவும்
மேலும் டாக்டர். கீத் மூர் அவர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் பொழுது, மனித கரு வளர்ச்சியானது பல தொகுதிகளைக் கொண்ட மிகவும் சிக்கலான, இடைவிடாத தொடர்ச்சியான பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வளர்நிலைகளைக் கொண்டது. இந்த வளர்நிலைத் தொடர் மாற்றங்களை குர்ஆன் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மணிமொழி (ஹதீஸ்) களைப் பயன்படுத்தி தனித் தனிப் பிரிவுகளாக அல்லது நிலைகளாக பிரித்தறிவதற்கான புதிய முறைகளை ஏற்படுத்த முடிந்துள்ளது. (இது நவீன விஞ்ஞானத்தற்கு குர்ஆன் வழங்கியுள்ள பேருதவியாகும் - ஆசிரியர்) இந்த புதிய முறையானது இலகுவானதாகவும், விரிவானதாகவும், இன்றைய அறிவியல் கொள்கைகளுக்கு ஏற்புடையதாகவும் அமைந்துள்ளது. 7-ஆம் நூற்றாண்டின் போது வாழ்ந்த அண்ணலார் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கிய குர்ஆனையும் அவர்களது போதனை (ஹதீஸ்) களையும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியதன் விளைவாக, மனிதனின் கருவளர்ச்சியின் நிலைகளைப் பற்றிய அறிவை இன்றைய நவீன அறிவியல் உலகத்திற்கு தெளிவுபடுத்த முடிந்துள்ளது என்பது மிகவும் ஆச்சரியமானதே!!! என்று குறிப்பிட்டுப் பேசினார்.

மேலும் அவர் பேசும் போது:
கரு வளர்ச்சியின் நிலைகளைப் பற்றி கோழி முட்டையில் தம் ஆய்வை நிகழ்த்தி, இன்றுள்ள அறிவியல் உலகிற்கு கரு வளர்ச்சி பற்றிய முதன் முதல் அறிவை வழங்கியவர் அரிஸ்டாட்டில் என்ற அறிவியலாளர் தான். ஆனால் அவர் கூட குர்ஆன் கூறிய அளவிற்கு கருவின் பல வளர்நிலைகளைப் பற்றி குறிப்பிடவில்லை. எனக்குத் தெரிந்த வரை, இந்த 20-ம் நூற்றாண்டில் தான் மனிதனின் கருவின் வளர்நிலைகளைப் பற்றிய அறிவியல் அறிவை சிறிதளவே விஞ்ஞானிகள் பெற்றிருந்தனர்.
இதன் மூலம் குர்ஆனில் கூறப்பட்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் (குர்ஆனிய வசனங்கள்) யாவும், அது 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதிலிருந்து, திருமறைக் குர்ஆன் கொண்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் யாவும் மனிதனின் அறிவு சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருக்க முடியாது என்பதும் தெளிவாகிறது. மேலும், திருமறைக் குர்ஆனானது இறைவன் அவனது திருத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கிய வேதம் தான் என்ற ஒரே இறுதி முடிவுக்குத் தான் நம்மால் வர இயலுகின்றது. ஏனெனில், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத, எந்த அறிவியல் பயிற்சியும் பெற்றிராத முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 நிச்சயமாக அல்குர்ஆன் தெய்வீகத் தன்மைபொறுந்திய வேத வெளிப்பாடு என்பதில் சந்தேகமே இல்லை.
அவர்கள், இன்றைய அறிவியலுக்கு முரண்படாத கருத்துக்களை பெற்றிருந்திருப்பார்கள் என்பதை நம்மால் கூற இயலாது.
திருமறைக் குர்ஆனானது கருவின் வளர்நிலைகளைப் பற்றிக் கூறும் போது:
"நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை 'அலக்' என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)
இனித் தொடராக வரக்கூடிய குர்ஆனின் வசனங்கள் யாவும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டவைகளே. அரபி மொழியில் இருக்கும் வசனங்கள் தான் குர்ஆன் எனப்படும். அதில் தான் நாம் குர்ஆனின் முழுமையான அர்த்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் வரும் 'அலக்கா' (
1) அட்டைப் பூச்சி.
2) தொடுக்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்
3) இரத்தக் கட்டி
இந்த அலக்கா (عـلـقة
அலக்கா (عـلـقة) எனும் அரபிப் பதத்திற்கான இரண்டாவது பொருளானது தொட்டுக் கொண்டு அல்லது தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் எனப்படும். தாயின் கர்ப்ப அறையில், கருவின் முதல் ஆரம்ப வளர் நிலையில் எவ்வாறு கரு அமைந்திருக்கும் என்பதையும், அது எவ்வாறு கர்ப்ப அறையில் தொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் காணலாம்.

மேலும் கருவின் வளர்நிலையில் அதனது மூன்றாவது வாரம் வரை இரத்த ஓட்டச் சுழற்சி செயல்படாதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.(The Developing Human, Moore and Persuad, 5th ed., P.65).

கி.பி. 1677-ல் தான் ஆணின் விந்தில் உள்ள ஸ்பெர்மெடோஸோவா (Spermatazoa) எனும் விந்தணுச் செல்லை உருப்பெருக்கி (Miroscope) மூலம் ஹாம் மற்றும் லீயுவென்ஹேக் எனும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். இவர்கள் வாழ்ந்த அந்தக் காலம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தை விட 1000 ஆண்டுகள் பிந்தைய காலமாகும் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இவர்கள் விந்தணுவைக் குறித்து ஆய்வு செய்த போது, விந்தணுவில் இருக்கும் மனிதனின் மாதிரித் தோற்றம் தான், பெண்ணின் கருப்பையை அடைந்து, வளர்கிறது எனும் (தவறான) கொள்கையை அன்றைய மக்கள் கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. (The Developing Human, Moore and Persuad, 5th ed., P.9).


இதைத் தொடர்ந்து, மேற்கண்ட ஆய்வுகளின் மூலம் குர்ஆனானது இறைவனின் வேதம் தான் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? ஏனக் கேட்ட பொழுது இதில் எனக்கு எந்த சிரமமும்ல்லை எனப் பதில் கூறினார்

குறிப்பு  :- டாக்டர் கீத் மூர் தொடர்பாக இன்று ஒரு புத்தகத்தில் படித்த போது அது தொடர்பாக இணையத்தளத்தில் தேடிய வேளை கிடைத்த தகவல்கள் இங்கே..மேலதிக விளக்கங்களுக்கு இங்கே செல்லவும்
http://islamforhumanity.wordpress.com/2011/06/29/quran-science-dr-keith-moore-confirms-embryology-in-quran/
https://mustaqeem.wordpress.com/2008/02/18/keith-moore-on-embryology-in-the-quran/

Sunday, May 27, 2012

ஆளுமை விருத்தி பெற்ற குழந்தைகளை உருவாக்க வேண்டுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

 படித்த விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டதன் விளைவே இந்த பதிவு.உளவியல் மற்றும் உளவளஆற்றுபடுத்துகை தொடர்பாக கற்றுக் கொண்டு இருப்பதனால் அதனுடன் தொடர்பு பட்ட பதிவு. இருந்தாலும் என்னவோ தெரியல எல்லா விடயங்களும் இஸ்லாத்துடன் தொடர்பு பட்டு காணப்படுகின்றது என்பதை மறுக்கவும் , மறைக்கவும் முடியல.பதிவ படிச்சு முடிச்சதும் உங்களுக்கே புரியும் நான் ஏன் அப்டி சொன்னன் என்று.


பெற்றோர்களுக்கு எப்போதும் தமது குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட ஆற்றல் மிக்கவர்களா இருக்க வேண்டும் என்ற அவா இயல்பாகவே இருக்கிறது.ஆசை மட்டும் இருந்தால் போதாது அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.அப்படி ஆயின் சிறந்த பயிற்சிகளை அவர்களுக்கு வழங்க வேண்டுமே தவிர திணிக்கக்கூடாது.அந்தவகையில் ஒரு குழந்தையை எவ்வாறு ஆளுமை மிக்கவராக வளர்க்கலாம் என்பதை அறிய முதல் ஆளுமை என்றால் என்ன? என்பது தொடர்பாக சுருக்கமாக நோக்கலாம்.

ஆளுமை என்பதைச் சுருக்கமாக "ஒருவரைத் தனித்துவமானவராக ஆக்கும் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள் என்பவற்றாலான ஒன்று" என வரையறுக்கலாம்.ஆளுமை என்னும் தமிழ்ச் சொல் "பர்சனாலிட்டி" (Personality) என்னும் ஆங்கிலச் சொல் குறிக்கும் கருத்துருவைக் குறிக்க ஏற்பட்டது. இலத்தீன் மொழியில் "பர்சனா" (persona) என்பது 'மறைப்பு', 'முகமூடி' என்னும் பொருள் தருவது. எனவே ஆளுமை என்பது "ஒருவர் அணிந்திருக்கும் முகமூடி" என்னும் கருத்துருவின் அடிப்படையைக் கொண்டுள்ளது.

  • குழந்தைகளுடன் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களை மடியில் அமர்த்துவது, தூக்குவது, அவர்கள் மீது அன்பை வெளிப்படுத்துவது என்பன குழந்தைகளின் ஆளுமை விருத்திக்குப் பெரிதும் உதவும். நாம் பாதுகாப்பான, அன்பான சூழலில் வாழ்கின்றோம் என்ற உணர்வு அவர்களுக்குப் பெரிதும் உத்வேகம் அளிக்கும்.முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இதனை நமக்கு வாழ்ந்து காட்டிவிட்டு சென்றுள்ளார்கள்.உதாரணமாக

நபி(ஸல்) அவர்களின் அடிமையாக இருந்த ஸைத்(ரழி) அவர்களது மகன் உஸாமா(ரழி) அவர்கள் பார்ப்பதற்குக் கண்ணங்-கரேர் என்று இருப்பார். இவருடைய தாயார் ஒரு ‘நீக்றோ’ அடிமையாவார்கள். நாம் அழகான பிள்ளைகள் மீதுதான் அன்பைச் சொரிவோம். அவர்களைத்தான் அள்ளி அணைப்போம்.ஆனால் நபி(ஸல்) அவர்கள் பார்க்கப் பிடிக்காத பிள்ளைகளுடனும் பாசத்தைப் பொழிந்து பழகுவார்கள்.
எனவே குழந்தைகளிடம் காட்டப்படும் பாராபடசம் அவர்களின் ஆளுமை சிதைவுக்கு வழிவகுக்கின்றது.
  • குழந்தையின் ஆளுமையை விருத்தி செய்வதில், கட்டி எழுப்புவதில் விளையாட்டுக்குப் பெரும் பங்குண்டு. குழந்தையுடன் விளையாட்டும் பிறக்கின்றது. குழந்தை சுதந்திர வளர்ச்சியில் அதன் தன்னுணர்வில் விளையாட்டு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. விளையாடும் போது குழந்தை தன்னைத்தானே அறிந்து கொள்கின்றது. குழந்தை விளையாட முயன்று தவறுகின்றது. அவ்வனுபவத்தை திரும்பப் பெறுவதால் தன் தவறுகளை தானாகவே திருத்திக் கொள்கின்றது. விளையாடும் போது குழந்தை சிந்திக் கின்றது.விளையாட்டானது குழந்தையின் உடல், அறிவு, உள, சமூக வளர்ச்சிக்குறிய களமாக அமைகின்றது. விளையாட்டில் ஈடுபடல், மன மகிழ்வு, ஆறுதல் போன்ற இலக்குகளாக கொண்டிருக்கும் அதே நேரம் சுதந்திரமாகச் சிந்திக்கவும் பல்வேறு திறன்களை குழந்தை பெற்றுக்கொள்ளவும் உதவுகின்றது.
நபி ஸல் அவர்கள் குழந்தைகளுடன் விளையாடினார்கள். அவர்களுடன் நகைச்சுவையாகப் பேசினார்கள். குழந்தைகளின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்கள். அவ்வாறே நபிகளார் குழந்தைகளுக்கிடையில் போட்டிகளை ஏற்பாடு செய்து பரிசில்களை வழங்கினார்கள். அப்துல்லாஹ் இப்னு ஹர்த் அறிப்பவதாவது நபி ஸல் அவர்கள் அப்துல்லாஹ், உபைதுல்லாஹ் போன்ற அப்பாஸ் ரழி அவர்களின் பல பிள்ளைகளை ஓர் அணியாக நிற்கவைப்பார்கள். பின்னர் அவர்களைப் பார்த்து யார் முந்தி வருகிறாரோ அவருக்கு இன்ன இன்ன பரிசுகள் தருவேன் என்று அறிவிப்பார்கள். அப்பொழுது குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு ஓடிப்போய் நபிகளாரின் முதுகிலும் மார்பிலும் விழுவார்கள். நபிகளார் அவர்களை வாரியணைத்து முத்தமிடுவார்கள். (ஆதாரம் அஹ்மத் 1/1836)
 
  • சில பெற்றோர் எப்போதும் தமது குழந்தைகளைக் குறை கூறிக்கொண்டும், குத்திப் பேசிக்கொண்டும் இருப்பர். அவர்களின் பணிகளில் குறை காண்பதில் இவர்களுக்கு அளாதிப் பிரியம் இருக்கும். இருப்பினும் குழந்தைகளின் நன்மைகளையோ, திறமைகளையோ மறந்தும் கூட இவர்கள் போற்றுவதும் இல்லை.
‘நான் நபி(ஸல்) அவர்களுக்கு 10 ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர்கள் என்னைப் பார்த்து ‘சீ..!’ என்றோ, நான் செய்த ஒரு செயல் குறித்து ‘ஏன் செய்தாய்?’ என்றோ, நான் செய்யாத ஒரு செயல் குறித்து ‘ஏன் செய்யவில்லை?’ என்றோ கேட்டதில்லை’ என்ற அனஸ்(ரழி) அவர்களின் கூற்றுக் குறித்துச் சிந்திப்பது அவசியமாகும்.

எனவே பெற்றோர்களே சற்று சிந்தியுங்கள்.குழந்தைகளின் உள்ளம் விதைப்பதற்கு தயாராக இருக்கும் ஈரநிலம் போன்றது.அதில் என்ன விதைப்பது ,எவ்வாறு அறுவடை செய்வது என்பது உங்கள் கைகளிலே உள்ளது.
 
வஸ்ஸலாம்

உங்கள் சகோதரி
பஸ்மின் கபீர்

Thursday, April 26, 2012

இருளில் தேடிய விடியல்

ரஹீமாவை அவரது தாய் கைத்தாங்கலாக அழைத்து வந்தார்  அந்த மரண (மைய்யத்) வீட்டுக்கு.அவள் அந்த வீட்டில் நுழைந்ததும் அங்கிருந்த பெண்களின் குரல் எல்லாம் ஓங்கி ஓலிக்க தொடங்கியது.அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.ஓர் ஓரமாய் போய் இருந்து கொண்டாள்.சாதீக்கின் உடல் அங்கே வைக்கப்பட்டிருந்தது.அருகில் சென்று பார்க்க கூட அவளுக்கு தயக்கமாக இருந்தது.பேசாமல் சாதீக்கின் சகோதரியின் அறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டாள்.."என்ன சோதனை யாஅல்லாஹ் ! அடுத்த கிழமை எனக்கு மணமகனாக என்னருகில் இருக்க வேண்டியவர்.இன்று மண்ணறைக்கு செல்லப்போகின்றாரே..உன் முடிவிற்கு யார் இங்கு மறுப்பு சொல்ல இயலும்" இவ்வாறான பல எண்ண ஓட்டங்கள் அவளை அறியாமலே வந்து போனது.

ஒரு கிழமை சென்றதன் பிற்பாடு.அவள் வழமைக்கு மாற வேண்டிய நிர்பந்தம்.வேலைக்கு செல்ல ஆயத்தமானாள்.வீட்டை விட்டு பஸ்ஸிற்காக தெருமுனையை அடைந்த போது  சாஹிரா எதிரே வந்தாள்."அஸ்ஸலாமு அலைக்கும் சாஹிரா"   "வலைக்கும் ஸலாம்" என்னப்பா வேலைக்கா போற ? இது உனக்கே நல்லா இருக்கா? உனக்கு நிச்சயம் பண்ணி வைத்த மாப்பிள்ளை மைவ்த் (இறந்து) ஆகி ஒரு கிழமை தான் ஆகுது அதுக்குள்ள வேலைக்கு போற" என வித்தியாசமாக பார்த்தாள்.ரஹிமாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.என்னை நன்றாக புரிந்து கொண்ட நண்பியே இவ்வாறு பேசும் போது ஏன் மற்றவர்கள் பிழையாக பேசமாட்டார்கள்.என்னவென்று இவர்களுக்கு நான் புரிய வைப்பது.பேசாமல் போனாலும் பிரச்சினை இவளாக ஏதும் சொன்னாலும் தவறு.என்ன பண்ணுவதென்று தெரியாமல் யோசித்து கொண்டிருந்த போது பேருந்து வர "சாஹிரா இன்னிக்கு நேரம் கிடைத்தால் வீட்டுக்கு வா.இன்ஷாஅல்லாஹ் எல்லாம் விளக்கமாக பேசலாம்" என கூறியவளாக ஸலாம் கூறி விடை பெற்றாள்.

சொன்னபடியே இரண்டு நாள் கழித்து ரஹிமா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் சாஹிரா.அவளை இன்முகத்துடன் ஸலாம் கூறி வரவேற்ற ரஹிமா.அவளுக்கு சாப்பிடுவதற்கு ஏதும் எடுத்து வர உள்ளே சென்றுவிட்டாள்.அப்போது ரஹிமாவின் உம்மாவிடம் பேச்சு கொடுத்தால் சாஹிரா."என்னம்மா நீங்க நீங்களாச்சும் அவளுக்கு புத்தி சொல்ல வேணாம்.இப்போ என்ன அவசரம் இவள் வேலைக்கு போக கொஞ்சம் நாள் கழிச்சு போயிருக்கலாமே. ஊர்காரங்க என்னமேல்லாம் பேசுறாங்க தெரியுமா.இவ அதிஷ்டம் குறைஞ்சவளாம்.அதனால தான் திருமணத்திற்கு முன்னமே சாதிக்க இழந்திட்டு நிக்கிறான்னு..  " என்று சொல்லி முடிக்கும் முன்னே ரஹிமா அங்கு வந்து இவள் சொன்னதை கேட்டுவிட்டாள். "நஊதுபில்லாஹி மின்ஹா" என்ன பேசுறன்னு தெரிஞ்சிட்டே தான் பேசுறீயா சாஹிரா?.இஸ்லாத்துக்கு முரணான எதையும் இங்க பேச வேணாம். அதிஷ்டம்,சகுனம் எல்லாம் மூடநம்பிக்கைகள்னு உனக்கு தெரியாதா?. மத்தவங்க பேசுறாங்கன்னா நீயுமா?"   எனக் கேட்டவளாக அமைதியானாள். சாஹிராவும் எதுவும் பேசாமல் விடைபெற்றாள்.

இரவு இருளில் நீண்ட நேரம் தொழுகையில் ஈடுபட்ட ரஹிமா அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி பிரார்த்தித்தாள். "யாஅல்லாஹ் எனக்கு பொறுமையை அளித்திடுவாயாக. என்னுடைய பாவங்களை மன்னித்திடுவாயாக. யாரெல்லாம் என்னை தவறாக என்ணுகின்றார்களே அவர்களுக்கு நல்ல எண்ணத்தை கொடுத்திடுவாயாக.திருமணமே முடிக்காது போனதற்கு  ஏதும் நலவு இருக்கும் என்று எனக்கு தெரியும்.ஒவ்வொரு கஸ்டத்திலும் ஒரு இலேசு உண்டு என்பதும் நான் அறிந்ததே.'பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். திண்ணமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்' (2:153)  என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றையும் பொறுமையாக ஏற்றுக்கொண்டாள் ரஹிமா.

சில மாதங்களின் பின் ரஹிமாவின் திருமணம் தொடர்பாக பேச்சு அடிபட்டது. ரஹிமாவின் வாப்பா அவளின் உம்மாவிடம் அவர் பேசிக்கொண்டிருந்தார். "என்ன பண்றன்னே தெரியல சுலைகா, நிறைய பேரிடம் பேசிட்டன் எல்லாரும் சாதிக்கின் மரணத்தோட நம்ம பெண்ணையும் தொடர்பு படுத்தியே பேசுறாங்க.அவ என்ன பண்ணா? இல்ல அந்த பையனுக்குத்தான் தெரியுமா? இப்டி நடக்கும் என்டு காய்ச்சல் என்று கொண்டு போனாங்க.இரண்டு நாளா கண்ணே முளிக்கல அப்புறம் இரத்ததுல கிருமி என்டாங்க மூணாம் நாள் அவன் இந்த உலகததையே விட்டு போய்ட்டான்.ம்ஹ்ஹ் என்ன பண்ற?.  
சுலைகா நம்ம பையன் கிட்ட பேசுங்க ஏதாச்சும் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி பார்க்க சொல்லி என்று முடிக்கும் முன்னே பாஸீத்தின் மோட்டார் சைக்கிள் வீட்டுக்குள் நுழைந்தது.

அவனுடன் யாரே இளைஞனும் கூட வர சுலைகா உள்ளே சென்று விட்டாள். பாஸித் தனது நண்பன் வாஹிதை தனது தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தான்.வாஹித் ஸலாம் கூறிக்கொண்டு பாஸித் அருகே  அமர்ந்தான். வாப்பா இது என்னோட நண்பன் வாஹித்.நம்ம ஊர் பாடசாலையில தான் கணித ஆசிரியரா இருக்கான்.பாடசாலையில் இருந்தே எனக்கு தெரியும்.இவன் வெளியூர்ல படிச்சதால நீங்க பெரிசா கண்டு இருக்க மாட்டீங்க.நல்ல மார்க்கபற்றும் இருக்கு வாப்பா.இவனா விரும்பி ஒரு விடயத்த எங்கீட்ட கேட்டான் வா வீட்ட போய் பேசலாம் என்டு கூட்டி வந்தன்.

"என்ன மகன் , என்ன விஷயம் தயங்காம சொல்லுங்க " என்றார் பாஸித்தின் தந்தை.
வாஹித் நீயே பேசு வாப்பா கிட்ட அப்போ தான் தெளிவா சொல்ல முடியும்"  என்றான் பாஸித்.
எனக்கு நேரடியா எதுவும் பேசித்தான் பழக்கம்.சுத்தீ வளைக்க தெரியாது. நான் உங்க மக ரஹிமாவ திருமணம் செய்ய விரும்புறன்.எங்க வீட்லயும் பேசிட்டன்.எல்லோருக்கும் விருப்பம்.உங்க விருப்பத்த தெரிவிச்சிங்கன்னா மேற்கொண்டு நடக்கீற காரியத்த பார்க்கலாம் என்று வந்த விடயத்தை தெளிவாக சொல்லி முடித்தான் பாஸித்.
அல்ஹம்துலில்லாஹ். இப்ப தான் நான் உம்மாகிட்ட பேசிட்டு இருந்தன். எல்லாம் நன்மைக்கு தான்.மகன் அல்லாஹ் தன்னை நம்பினோரை எப்பவும் கைவிட்டதே இல்ல .எனக்கு மனப்பூரணமா சம்மதம்.இருங்க இப்பவே சுலைகாடையும் , ரஹிமாடையும்   கேட்டுட்டு வாரன். என்று உள்ளே சென்ற சற்று நிமிடத்தில் முகத்தில் சந்தோசத்துடன் திரும்பி வந்தார்.

இருவீட்டார் சம்மதத்துடன் இறைவன் நாடியபடியே வாஹித், ரஹிமா திருமணம் நடைபெற்றது.அன்றும் ரஹிமா இரு கரம் ஏந்தியவளாக கண்ணீர் மல்க இறைவனுடன் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.இருளில் கிடைத்த விடியலை எண்ணி... 

உங்கள் சகோதரி....
பஸ்மின் கபீர் 
    

Saturday, April 21, 2012

முகபுத்தகத்தில் அறிமுகமான முகம் தெறியா நண்பர்கள் மனதை மாற்றிய கதை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 
நண்பர்கள் உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமானவர்கள்.நட்பு என்பது இல்லாத மனிதன் இன்று அவன் வாழும் வாழ்வில் பல விடயங்களை இழக்கின்றான்.பாடசாலை நட்பு; பல்கலைக்கழக நட்பு; ரயில் பயண நட்பு; டீக்கடை நட்பு; என பல தரப்பட்ட வகையில் நட்பு வளர்ந்து கொண்டு செல்ல இன்று அவைகளுக்கு மத்தியில் பிரபலமான நட்பு இணையத்தள நட்பாகும்.சமூக தளங்களில் நட்பு வளர்பதே இன்று அதிகமாகி விட்டது.அதிலும் குறிப்பாக முகப்பத்தகத்தில் (Facebook) நட்பு வளர்த்தல்  இன்றுஅவசியமானதாக கூட மாறிவிட்டது.இந்த பதிவும் அவ்வாறு முகப்புத்தகத்தில்  வளர்ந்த ; வளர்ந்து கொண்டிருக்கும் நட்பு தொடர்பானது தான்.


என்னடா ஆரம்பத்துலையே நட்பு , நட்பு என்று உயிர வாங்குரன்னு யோசிக்கீறீங்களா ? அத அவ்வளவு சாதாரணமா  எடை போட முடியாது. இணைத்தள நட்பு என்றது மத்தவங்களுக்கு எப்படியோ ஆனா எனக்கு ஒரு எல்லையை நானே போட்டுக்கிட்டன். ஆரம்பத்தில்  முகபுத்தகத்தில் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள், பல்கலைக்கழக நண்பர்களை மாத்திரமே இணைத்துக் கொள்வது என்றும் அதிலும் பல்கலைக்கழக நண்பர்கள் என்ற ரீதியில் என்னுடன் மிக மரியாதையாக பழக தெரிந்த நண்பர்களை மாத்திரம் இணைத்துக் கொள்வது என்று.இதனால் ஆரம்பத்தில் தெரியாதவர்களிடம் இருந்து வரும் எந்த தொடர்பையும் நான் ஏற்றுக்கொண்டது இல்லை.ஆனால் இந்த நிலை சீக்கிரம் மாறியது.முகப்புத்தகத்தில் இஸ்லாம் தொடர்பாக நிறைய சகோதரர்கள் பதிவுகள் போடுவதை பார்த்து அவர்களை தொடர தொடங்கினேன்.அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்ட வேண்டும் என எண்ணியதை யாரால் மாற்ற முடியும்???????????

மாஷாஅல்லாஹ் அருமையான நடபு கிடைத்தது.நண்பர்கள் என சொல்லி தூரம் வைக்க விரும்பவில்லை.சகோதரர்கள் என்று சொல்லலாம்.அவ்வளவு நெருக்கம்.என்னுடைய ஒவ்வொரு விடயத்திலும் மாற்றம் ஏற்பட்டது. முக்கியமாக....
  1. வாசிப்பு பழக்கம் அதிகமானது.
  2. எழுத்தாற்றல் அதிகரித்தது.
  3. எதையும் நுணுக்கமாக ஆராயும் பண்பு வளர்ந்தது.
  4. இஸ்லாமிய அறிவு வளர்ந்தது.
  5. விமர்சன சிந்தனை வளர்ந்தது.
  6. அனைத்து விடயங்களையும் இஸ்லாமிய அடிப்படையில் சிந்திக்கும் மனப்பக்குவம் உருவானது. (அல்ஹம்துலில்லாஹ்.) 
இன்னும் பல மாற்றங்கள்.இத்தகைய ஒவ்வொரு மாற்றத்திற்கும் பல சகோதரர்கள் பின்நின்றனர்.குறிப்பாக யார் பெயரையும் குறிப்பிடமுடியவில்லை.  (காரணம்:- அவர்கள் யாருக்கும் விளம்பரம் பிடிக்காது)
இதுவரையில் யாருடைய முகம்களும் எனக்கு தெரியாது.என்னுடைய முகம் கூட யாருக்கும் தெரியாத அளவிற்கு புனிதமான நட்பு.சில்லறைத்தனமான பேச்சுக்களுக்கு இடம் இல்லை.இஸ்லாத்திற்கும், அறிவுக்குமாய் சேர்ந்த கூட்டம். இதை யாரும் தடுக்கவோ , எதிர்கவோ முடியாது.
முகப்புத்தகத்தில் டைம் பாஸ் பண்ணிக்கொண்டிருந்த என்னை இஸ்லாத்திற்காய் உலா வர வைத்தது இந்த சகோதரத்துவம். என்னுடைய புகைப்படம் போடவிடினும் என்னுடைய அடையாளத்தை மாற்றியது இந்த சகோதரத்துவம்.ஒருவருக்கு கமெண்ட் பண்ணும் போது இவ்வாறு தான் பண்ண வேண்டும் என்று வரையறை சொல்லி தந்தது இந்த சகோதரத்துவம். 
என்னுடைய சந்தேகங்கள், கருத்துக்களுக்கு மதிப்பளித்து விளக்கம் அளித்தது இந்த சகோதரத்துவம்.எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காதது, எதிர்பார்ப்பும் இல்லாதது.என்னுடைதிறமையை மதித்து என்னை எழுத தூண்டியது இந்த சகோதரத்துவம் தான்.
 ஊர் குருவியாய் வலம் வந்த என்னை பீனிக்ஸ் பறவையாய் மாற்றியது இந்த சகோதரத்துவம்.அல்ஹம்துலில்லாஹ்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
உங்களில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவருக்கும் (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித்தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (-குடும்பத்தலைவன்-) தன் மனைவி மக்களின் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி) விசாரிக்கப்படுவான். பெண் (-மனைவி-), தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் (அந்தப் பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவான்.
அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 121
Volume :5 Book :67 
என்ற ஹதிஸின்  உண்மையை உணர்த்தியது இந்த சகோதரத்துவம் தான்.
அல்லாஹ் என்னுடைய மாற்றத்தில் பங்கு கொண்ட ஒவ்வொரு சகோதரருக்கும் உன்னிடம்  இரு கரம் ஏந்தி பிரார்திக்கின்றேன்.இவர்கள் அனைவருக்கும் நல்லருளை கொடுத்தருள்வாயாக, அவர்களுக்கு நல்ல அறிவு ஞானத்தை கொடுத்தருள்வாயாக, அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் வழங்குவாயாக, எங்கள் உறவுகளுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி விடாதே யாஅல்லாஹ்.. என்றுமே எங்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்துவாயாக.ஆமீன் . 
 
வஸ்லாம்.
உங்கள் சகோதரி..
க.பஸ்மின்.