Thursday, April 26, 2012

இருளில் தேடிய விடியல்

ரஹீமாவை அவரது தாய் கைத்தாங்கலாக அழைத்து வந்தார்  அந்த மரண (மைய்யத்) வீட்டுக்கு.அவள் அந்த வீட்டில் நுழைந்ததும் அங்கிருந்த பெண்களின் குரல் எல்லாம் ஓங்கி ஓலிக்க தொடங்கியது.அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.ஓர் ஓரமாய் போய் இருந்து கொண்டாள்.சாதீக்கின் உடல் அங்கே வைக்கப்பட்டிருந்தது.அருகில் சென்று பார்க்க கூட அவளுக்கு தயக்கமாக இருந்தது.பேசாமல் சாதீக்கின் சகோதரியின் அறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டாள்.."என்ன சோதனை யாஅல்லாஹ் ! அடுத்த கிழமை எனக்கு மணமகனாக என்னருகில் இருக்க வேண்டியவர்.இன்று மண்ணறைக்கு செல்லப்போகின்றாரே..உன் முடிவிற்கு யார் இங்கு மறுப்பு சொல்ல இயலும்" இவ்வாறான பல எண்ண ஓட்டங்கள் அவளை அறியாமலே வந்து போனது.

ஒரு கிழமை சென்றதன் பிற்பாடு.அவள் வழமைக்கு மாற வேண்டிய நிர்பந்தம்.வேலைக்கு செல்ல ஆயத்தமானாள்.வீட்டை விட்டு பஸ்ஸிற்காக தெருமுனையை அடைந்த போது  சாஹிரா எதிரே வந்தாள்."அஸ்ஸலாமு அலைக்கும் சாஹிரா"   "வலைக்கும் ஸலாம்" என்னப்பா வேலைக்கா போற ? இது உனக்கே நல்லா இருக்கா? உனக்கு நிச்சயம் பண்ணி வைத்த மாப்பிள்ளை மைவ்த் (இறந்து) ஆகி ஒரு கிழமை தான் ஆகுது அதுக்குள்ள வேலைக்கு போற" என வித்தியாசமாக பார்த்தாள்.ரஹிமாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.என்னை நன்றாக புரிந்து கொண்ட நண்பியே இவ்வாறு பேசும் போது ஏன் மற்றவர்கள் பிழையாக பேசமாட்டார்கள்.என்னவென்று இவர்களுக்கு நான் புரிய வைப்பது.பேசாமல் போனாலும் பிரச்சினை இவளாக ஏதும் சொன்னாலும் தவறு.என்ன பண்ணுவதென்று தெரியாமல் யோசித்து கொண்டிருந்த போது பேருந்து வர "சாஹிரா இன்னிக்கு நேரம் கிடைத்தால் வீட்டுக்கு வா.இன்ஷாஅல்லாஹ் எல்லாம் விளக்கமாக பேசலாம்" என கூறியவளாக ஸலாம் கூறி விடை பெற்றாள்.

சொன்னபடியே இரண்டு நாள் கழித்து ரஹிமா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் சாஹிரா.அவளை இன்முகத்துடன் ஸலாம் கூறி வரவேற்ற ரஹிமா.அவளுக்கு சாப்பிடுவதற்கு ஏதும் எடுத்து வர உள்ளே சென்றுவிட்டாள்.அப்போது ரஹிமாவின் உம்மாவிடம் பேச்சு கொடுத்தால் சாஹிரா."என்னம்மா நீங்க நீங்களாச்சும் அவளுக்கு புத்தி சொல்ல வேணாம்.இப்போ என்ன அவசரம் இவள் வேலைக்கு போக கொஞ்சம் நாள் கழிச்சு போயிருக்கலாமே. ஊர்காரங்க என்னமேல்லாம் பேசுறாங்க தெரியுமா.இவ அதிஷ்டம் குறைஞ்சவளாம்.அதனால தான் திருமணத்திற்கு முன்னமே சாதிக்க இழந்திட்டு நிக்கிறான்னு..  " என்று சொல்லி முடிக்கும் முன்னே ரஹிமா அங்கு வந்து இவள் சொன்னதை கேட்டுவிட்டாள். "நஊதுபில்லாஹி மின்ஹா" என்ன பேசுறன்னு தெரிஞ்சிட்டே தான் பேசுறீயா சாஹிரா?.இஸ்லாத்துக்கு முரணான எதையும் இங்க பேச வேணாம். அதிஷ்டம்,சகுனம் எல்லாம் மூடநம்பிக்கைகள்னு உனக்கு தெரியாதா?. மத்தவங்க பேசுறாங்கன்னா நீயுமா?"   எனக் கேட்டவளாக அமைதியானாள். சாஹிராவும் எதுவும் பேசாமல் விடைபெற்றாள்.

இரவு இருளில் நீண்ட நேரம் தொழுகையில் ஈடுபட்ட ரஹிமா அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி பிரார்த்தித்தாள். "யாஅல்லாஹ் எனக்கு பொறுமையை அளித்திடுவாயாக. என்னுடைய பாவங்களை மன்னித்திடுவாயாக. யாரெல்லாம் என்னை தவறாக என்ணுகின்றார்களே அவர்களுக்கு நல்ல எண்ணத்தை கொடுத்திடுவாயாக.திருமணமே முடிக்காது போனதற்கு  ஏதும் நலவு இருக்கும் என்று எனக்கு தெரியும்.ஒவ்வொரு கஸ்டத்திலும் ஒரு இலேசு உண்டு என்பதும் நான் அறிந்ததே.'பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். திண்ணமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்' (2:153)  என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றையும் பொறுமையாக ஏற்றுக்கொண்டாள் ரஹிமா.

சில மாதங்களின் பின் ரஹிமாவின் திருமணம் தொடர்பாக பேச்சு அடிபட்டது. ரஹிமாவின் வாப்பா அவளின் உம்மாவிடம் அவர் பேசிக்கொண்டிருந்தார். "என்ன பண்றன்னே தெரியல சுலைகா, நிறைய பேரிடம் பேசிட்டன் எல்லாரும் சாதிக்கின் மரணத்தோட நம்ம பெண்ணையும் தொடர்பு படுத்தியே பேசுறாங்க.அவ என்ன பண்ணா? இல்ல அந்த பையனுக்குத்தான் தெரியுமா? இப்டி நடக்கும் என்டு காய்ச்சல் என்று கொண்டு போனாங்க.இரண்டு நாளா கண்ணே முளிக்கல அப்புறம் இரத்ததுல கிருமி என்டாங்க மூணாம் நாள் அவன் இந்த உலகததையே விட்டு போய்ட்டான்.ம்ஹ்ஹ் என்ன பண்ற?.  
சுலைகா நம்ம பையன் கிட்ட பேசுங்க ஏதாச்சும் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி பார்க்க சொல்லி என்று முடிக்கும் முன்னே பாஸீத்தின் மோட்டார் சைக்கிள் வீட்டுக்குள் நுழைந்தது.

அவனுடன் யாரே இளைஞனும் கூட வர சுலைகா உள்ளே சென்று விட்டாள். பாஸித் தனது நண்பன் வாஹிதை தனது தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தான்.வாஹித் ஸலாம் கூறிக்கொண்டு பாஸித் அருகே  அமர்ந்தான். வாப்பா இது என்னோட நண்பன் வாஹித்.நம்ம ஊர் பாடசாலையில தான் கணித ஆசிரியரா இருக்கான்.பாடசாலையில் இருந்தே எனக்கு தெரியும்.இவன் வெளியூர்ல படிச்சதால நீங்க பெரிசா கண்டு இருக்க மாட்டீங்க.நல்ல மார்க்கபற்றும் இருக்கு வாப்பா.இவனா விரும்பி ஒரு விடயத்த எங்கீட்ட கேட்டான் வா வீட்ட போய் பேசலாம் என்டு கூட்டி வந்தன்.

"என்ன மகன் , என்ன விஷயம் தயங்காம சொல்லுங்க " என்றார் பாஸித்தின் தந்தை.
வாஹித் நீயே பேசு வாப்பா கிட்ட அப்போ தான் தெளிவா சொல்ல முடியும்"  என்றான் பாஸித்.
எனக்கு நேரடியா எதுவும் பேசித்தான் பழக்கம்.சுத்தீ வளைக்க தெரியாது. நான் உங்க மக ரஹிமாவ திருமணம் செய்ய விரும்புறன்.எங்க வீட்லயும் பேசிட்டன்.எல்லோருக்கும் விருப்பம்.உங்க விருப்பத்த தெரிவிச்சிங்கன்னா மேற்கொண்டு நடக்கீற காரியத்த பார்க்கலாம் என்று வந்த விடயத்தை தெளிவாக சொல்லி முடித்தான் பாஸித்.
அல்ஹம்துலில்லாஹ். இப்ப தான் நான் உம்மாகிட்ட பேசிட்டு இருந்தன். எல்லாம் நன்மைக்கு தான்.மகன் அல்லாஹ் தன்னை நம்பினோரை எப்பவும் கைவிட்டதே இல்ல .எனக்கு மனப்பூரணமா சம்மதம்.இருங்க இப்பவே சுலைகாடையும் , ரஹிமாடையும்   கேட்டுட்டு வாரன். என்று உள்ளே சென்ற சற்று நிமிடத்தில் முகத்தில் சந்தோசத்துடன் திரும்பி வந்தார்.

இருவீட்டார் சம்மதத்துடன் இறைவன் நாடியபடியே வாஹித், ரஹிமா திருமணம் நடைபெற்றது.அன்றும் ரஹிமா இரு கரம் ஏந்தியவளாக கண்ணீர் மல்க இறைவனுடன் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.இருளில் கிடைத்த விடியலை எண்ணி... 

உங்கள் சகோதரி....
பஸ்மின் கபீர் 
    

Saturday, April 21, 2012

முகபுத்தகத்தில் அறிமுகமான முகம் தெறியா நண்பர்கள் மனதை மாற்றிய கதை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 
நண்பர்கள் உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமானவர்கள்.நட்பு என்பது இல்லாத மனிதன் இன்று அவன் வாழும் வாழ்வில் பல விடயங்களை இழக்கின்றான்.பாடசாலை நட்பு; பல்கலைக்கழக நட்பு; ரயில் பயண நட்பு; டீக்கடை நட்பு; என பல தரப்பட்ட வகையில் நட்பு வளர்ந்து கொண்டு செல்ல இன்று அவைகளுக்கு மத்தியில் பிரபலமான நட்பு இணையத்தள நட்பாகும்.சமூக தளங்களில் நட்பு வளர்பதே இன்று அதிகமாகி விட்டது.அதிலும் குறிப்பாக முகப்பத்தகத்தில் (Facebook) நட்பு வளர்த்தல்  இன்றுஅவசியமானதாக கூட மாறிவிட்டது.இந்த பதிவும் அவ்வாறு முகப்புத்தகத்தில்  வளர்ந்த ; வளர்ந்து கொண்டிருக்கும் நட்பு தொடர்பானது தான்.


என்னடா ஆரம்பத்துலையே நட்பு , நட்பு என்று உயிர வாங்குரன்னு யோசிக்கீறீங்களா ? அத அவ்வளவு சாதாரணமா  எடை போட முடியாது. இணைத்தள நட்பு என்றது மத்தவங்களுக்கு எப்படியோ ஆனா எனக்கு ஒரு எல்லையை நானே போட்டுக்கிட்டன். ஆரம்பத்தில்  முகபுத்தகத்தில் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள், பல்கலைக்கழக நண்பர்களை மாத்திரமே இணைத்துக் கொள்வது என்றும் அதிலும் பல்கலைக்கழக நண்பர்கள் என்ற ரீதியில் என்னுடன் மிக மரியாதையாக பழக தெரிந்த நண்பர்களை மாத்திரம் இணைத்துக் கொள்வது என்று.இதனால் ஆரம்பத்தில் தெரியாதவர்களிடம் இருந்து வரும் எந்த தொடர்பையும் நான் ஏற்றுக்கொண்டது இல்லை.ஆனால் இந்த நிலை சீக்கிரம் மாறியது.முகப்புத்தகத்தில் இஸ்லாம் தொடர்பாக நிறைய சகோதரர்கள் பதிவுகள் போடுவதை பார்த்து அவர்களை தொடர தொடங்கினேன்.அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்ட வேண்டும் என எண்ணியதை யாரால் மாற்ற முடியும்???????????

மாஷாஅல்லாஹ் அருமையான நடபு கிடைத்தது.நண்பர்கள் என சொல்லி தூரம் வைக்க விரும்பவில்லை.சகோதரர்கள் என்று சொல்லலாம்.அவ்வளவு நெருக்கம்.என்னுடைய ஒவ்வொரு விடயத்திலும் மாற்றம் ஏற்பட்டது. முக்கியமாக....
  1. வாசிப்பு பழக்கம் அதிகமானது.
  2. எழுத்தாற்றல் அதிகரித்தது.
  3. எதையும் நுணுக்கமாக ஆராயும் பண்பு வளர்ந்தது.
  4. இஸ்லாமிய அறிவு வளர்ந்தது.
  5. விமர்சன சிந்தனை வளர்ந்தது.
  6. அனைத்து விடயங்களையும் இஸ்லாமிய அடிப்படையில் சிந்திக்கும் மனப்பக்குவம் உருவானது. (அல்ஹம்துலில்லாஹ்.) 
இன்னும் பல மாற்றங்கள்.இத்தகைய ஒவ்வொரு மாற்றத்திற்கும் பல சகோதரர்கள் பின்நின்றனர்.குறிப்பாக யார் பெயரையும் குறிப்பிடமுடியவில்லை.  (காரணம்:- அவர்கள் யாருக்கும் விளம்பரம் பிடிக்காது)
இதுவரையில் யாருடைய முகம்களும் எனக்கு தெரியாது.என்னுடைய முகம் கூட யாருக்கும் தெரியாத அளவிற்கு புனிதமான நட்பு.சில்லறைத்தனமான பேச்சுக்களுக்கு இடம் இல்லை.இஸ்லாத்திற்கும், அறிவுக்குமாய் சேர்ந்த கூட்டம். இதை யாரும் தடுக்கவோ , எதிர்கவோ முடியாது.
முகப்புத்தகத்தில் டைம் பாஸ் பண்ணிக்கொண்டிருந்த என்னை இஸ்லாத்திற்காய் உலா வர வைத்தது இந்த சகோதரத்துவம். என்னுடைய புகைப்படம் போடவிடினும் என்னுடைய அடையாளத்தை மாற்றியது இந்த சகோதரத்துவம்.ஒருவருக்கு கமெண்ட் பண்ணும் போது இவ்வாறு தான் பண்ண வேண்டும் என்று வரையறை சொல்லி தந்தது இந்த சகோதரத்துவம். 
என்னுடைய சந்தேகங்கள், கருத்துக்களுக்கு மதிப்பளித்து விளக்கம் அளித்தது இந்த சகோதரத்துவம்.எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காதது, எதிர்பார்ப்பும் இல்லாதது.என்னுடைதிறமையை மதித்து என்னை எழுத தூண்டியது இந்த சகோதரத்துவம் தான்.
 ஊர் குருவியாய் வலம் வந்த என்னை பீனிக்ஸ் பறவையாய் மாற்றியது இந்த சகோதரத்துவம்.அல்ஹம்துலில்லாஹ்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
உங்களில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவருக்கும் (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித்தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (-குடும்பத்தலைவன்-) தன் மனைவி மக்களின் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி) விசாரிக்கப்படுவான். பெண் (-மனைவி-), தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் (அந்தப் பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவான்.
அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 121
Volume :5 Book :67 
என்ற ஹதிஸின்  உண்மையை உணர்த்தியது இந்த சகோதரத்துவம் தான்.
அல்லாஹ் என்னுடைய மாற்றத்தில் பங்கு கொண்ட ஒவ்வொரு சகோதரருக்கும் உன்னிடம்  இரு கரம் ஏந்தி பிரார்திக்கின்றேன்.இவர்கள் அனைவருக்கும் நல்லருளை கொடுத்தருள்வாயாக, அவர்களுக்கு நல்ல அறிவு ஞானத்தை கொடுத்தருள்வாயாக, அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் வழங்குவாயாக, எங்கள் உறவுகளுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி விடாதே யாஅல்லாஹ்.. என்றுமே எங்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்துவாயாக.ஆமீன் . 
 
வஸ்லாம்.
உங்கள் சகோதரி..
க.பஸ்மின்.