Thursday, June 14, 2012

இஸ்லாத்தின் அடிப்படையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் வழிமுறைகள் .பாகம் - 02

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

குழந்தைகளை பயிற்றுவிக்கும் முறைகளில் அடுத்த முறைகள் தொடர்பாக இங்கு  நோக்கலாம்.

3. வெகுமதியும் தண்டனையும்:-

இந்த வழிமுறையானது குழந்தைகளை சீர்திருத்துவதையும் அதன் நடத்தையை நெறிப்படுத்துவதையுமே இலக்காகக் கொண்டுள்ளது. பிள்ளையைப் பழிவாங்குவதோ, குற்றங்காண்பதோ, மிரட்டுவதோ இதன் நோக்கமன்று .இங்கு வெகுமதியும் தண்டனையும் பிள்ளையை சீர்திருத்தவும், தகாத நடவடிக்கையை மாற்றியமைக்கவும், நல்ல செயல்களை ஊக்கப்படுத்தவும்  உதவும் வழிமுறைகளில் ஒன்று.தண்டிப்பதற்கு முன்னால் குழந்தையின் இயல்பை அறிந்திருப்பது அவசியமாகும்.

இமாம் கஸ்ஸாலி தனது "இஹ்யா"வில் பிள்ளையை பயிற்றுவிப்பவரை மருத்துவருக்கு ஒப்பிடுகின்றார்.
 "பிள்ளையிடம் ஒரு நற்பண்பு காணப்படும் போது அதனைப் பாராட்டுவதும், அதற்கு பரிசு வழங்குவதும் பலருக்கு முன்னால் அதனை புகழ்வதும் அவசியமாகும்.பிள்ளை இதற்கு முரணாக நடந்துவிட்டால் அதனை பெரிதுபடுத்தாது, அதன் குறையைக் கூறி அவமானப்படுத்தக்கூடாது.மீண்டும் மீணடும் அந்த தவறை செய்தால் இரகசியமாக அதனை தண்டிக்க வேண்டும்"
குழந்தை நற்செயல் செய்தால் வெகுமதி கிடைக்கும் என்பதையும் அளவோடு கையாள வேண்டும்.இந்த நிலை அதிகரித்தாலும் ஆபத்து.எதிர்பார்ப்பு அதிகமாகி கிடைக்காத சந்தர்பத்தில் குழந்தை ஏமாந்து போக வாய்ப்புண்டு..அதே நேரம் தண்டனை வழங்கும் போது பாரதூரமாக நடந்து கொள்ளாது கண்ணியமான முறையில் நடந்து கொள்ளவேண்டும்.

4. கதை கூறுதல்:-

பேராசிரியர் அப்துர் ரஷீத் கூறும் போது "கதைகூறுதல் பிள்ளைகளை பயிற்றுவிக்கும் முறைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் முறையாகும் " என்கிறார்.கதையின் இயல்பு, மையக்கருத்து என்பவற்றை அடிப்படையாக கொண்டே அது குழந்தையிடம் நேர்நிலையான அல்லது மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.குழந்தைகளின் நடத்தையை நெறிப்படுத்துவதிலும், ஒழுக்கத்தை வலியுறுத்துவதிலும், கற்பனை ஆற்றலை வளர்பதிலும், ஆளுமை விருத்தியிலும் கதை பாரிய செல்வாக்கை கொண்டுள்ளது.கதையை தெரிவு செய்யும் போது ஆழமாக யோசித்து பின் கூறவேண்டும்

துப்பறியும் கதைகள், ஐதீக கதைகள், மூடநம்பிக்கையை வளர்க்கும் கதைகளை தவிர்த்து.இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் நபிகளாரின் வாழ்க்கை முறைகள்..சஹாபா தோழர்களின் தியாகம், இஸ்லாம் வளர்ந்து வந்த பாதை என்ற ரீதியில் கூறும் போது குழந்தைகள் சிறுவயதில் இருந்தே இஸ்லாமிய சூழலில் வளர வாய்ப்புள்ளது..

எளிய மொழியில், இனிய சொல்நடையில் கதைகூறுதல் அவசியமானது..குழந்தையின் விருப்பம், மனநிலையின் அடிப்படையில் கதைகூற வேண்டும்.எதையும் திணிக்க வேண்டாம்...
5. பழக்கத்தின் மூலம் பயிற்றுவித்தல்  :-

இறுதியான வழிமுறையாக பழக்கத்தின் மூலம் பயிற்றுவித்தல்  என்பது இளவயதில் கிடைக்கின்ற வாழ்க்கை அனுபவங்களே வாழ்க்கை முழுவதற்கு தொடரும்.இதற்கு ஒரு பழமொழியும் உண்டு."தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்" பேராசிரியர் முஹம்மத் குத்ப் கூறும் போது " பழக்கத்தின் மூலம் பயிற்றுவித்தல் சில குறிப்பிட்ட விடயங்களை தொடந்து வழிகாட்டும் போது அதனை குழந்தைகள் இலகுவாக பின்பற்றுவர்"

இஸ்லாமிய பயிற்சி கோட்பாட்டின் படி பழக்கத்திற்கு சிறந்த உதாரணம் வணக்க வழிபாடுகளை பயிற்றுவித்தலாகும்.சிறிய வயதில் இப்பழக்கத்தை ஏற்படுத்துவது எளிது.இறைதூதர் (ஸல்) பொறுப்புக்களை ஏற்கும் பருவத்திற்கு முன்னரே பிள்ளைகளை தொழுகைக்குப் பழக்குமாறு ஏவினார்கள்.பின் அது அன்றாட பழக்கமாக மாறிவிடும்.

"ஏழுவயதாகும் பிள்ளைகளுக்கு தொழும்படி ஏவுங்கள், பத்து வயதாகும் போது அதற்காக அடியுங்கள்"

இதே போன்று பல விடயங்களை பழக்கத்திற்கு கொண்டு வரலாம்.சிறுவயதிலேயே ஹிஐ◌ாப் அணிய பழக்கினால் பருவமடைந்தபின் சடங்காக அணியும் நிலை தொடராது.எந்தவொரு விடயமும் இறைவனின் கட்டளை என்பதை பிள்ளைகளுக்கு பழக்கிவிட்டால் யார் சொன்னாலும் பின் அதில் மாற்றம் ஏற்படாது...

எனவே மேற்குறிப்பிட் வகையில் எமது பிள்ளைகளை சிறய விடயங்களில் கூட அக்கறை கொண்டு கவனிப்போமானால்  நல்ல தலைவர்கள் நமது வீட்டிலேயே உருவாகி விடுவார்கள்.இன்ஷா அல்லாஹ் நாமும் இதனை பின்பற்றி நடந்தால் நாளை மறுமையில் அல்லாஹ;விடத்தில் எமது பொறுப்புக்கள் தொடர்பாக தயக்கமின்றி பதிலளிப்பதோடு அல்லாமல் குடும்பத்துடன் சுவனம் புகலாம்..

வஸ்ஸலாம்..

உங்கள் சகோதரி
பஸ்மின் கபீர்

பாகம் --01

இஸ்லாத்தின் அடிப்படையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் வழிமுறைகள்


Monday, June 11, 2012

இஸ்லாத்தின் அடிப்படையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் வழிமுறைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

18:46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.
குழந்தைகள் வாழ்க்கையின் வரப்பிரசாதங்கள்..தனிமையை போக்கி எமது வாழ்வையே அழகுபடுத்துபவர்கள் குழந்தைகள் தான்.இருந்தாலும் அவர்களின் வாழ்வை அழகு படுத்தும் பொறுப்பை அல்லாஹ் ஒவ்வொரு பெற்றோருக்கும் வழங்கியுள்ளான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே, தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானனின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.
(அறிவிப்பவர்:இப்னு உமர்(ரலி), நூல்: புஹ்காரி 2409)

குழந்தைகளை பயிற்றுவிப்பது என்பது கற்றல் நடவடிக்கை மட்டும் தான் என்பது அனேக பெற்றோர்களின் எண்ணம்.ஆனால் பிள்ளைகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் பயிற்றுவிப்பது பெற்றோரின் கடமையாகும். பயிற்றுவித்தல் வழிமுறைகள் பல வகைப்படுகின்றன.அவற்றில் சில



  • வழிகாட்டல்
  • உபதேசம்
  • வெகுமதியும் தண்டனையும்
  • கதை கூறுதல்
  •  பழக்கத்தின் மூலம் பயிற்றுவித்தல்  

1. வழிகாட்டல்:-

வழிகாட்டல் மூலம் பயிற்றுவித்தல் என்பது ஏனைய வழிமுறைகளை விட சிறந்த வழிமுறையாகும். வழிகாட்டல் மூலம் பயிற்றுவிப்பதை இஸ்லாம் மிக உயர்ந்த வழிமுறையாகக் கருதுகின்றது.அடிப்படையிலேயே குழந்தைக்கு வீட்டில் இஸ்லாமிய ரீதியில் வழிகாட்டலை வழங்க வேண்டும்.
இஸ்லாமிய ஆளுமைகளுடன் பிள்ளை வளர வேண்டுமாயின் குடும்பம் தூய இஸ்லாமிய பண்புகளுடன் இருக்க வேண்டும்.அதற்கு அடிப்படை சத்திய வாக்காக குர்ஆனும் நடமாடும் சத்தியமாக முஹம்மத் (ஸல்) அவர்களும் இருந்தார்கள்.
33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
எனவே குழந்தைகளுக்கு வழிகாட்டும் போது  குர்ஆனையும், முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை மாதிரியையும் வழிகாட்டலாக கொண்டால் உங்கள் பிள்ளைகளின் வாழ்வு சுபீட்சம் காணும்.

2.உபதேசம்:-

நல்ல உபதேசம் மனித உணர்வுகளை உசுப்பி விடுகின்றது.முன்மாதிரியான வழிகாட்டலுக்கு வெறும் உபதேசம் மட்டும் அதிக பலனளிப்பதில்லை.சிறந்த வழிகாட்டலுடன் உபதேசமும் இடம் பெறுமானால்  அது மனித உள்ளத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.குழந்தைகள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்கும் முன் உயர் ஒழுக்கங்களை புரிய வைக்க உள்ளத்தை தொடும் உபதேசம் அவசியமாகின்றது.இத்தகைய உபதேசங்கள் அல்குர்ஆனில் அதிகமாக காணப்படுகின்றன..
அவற்றுள் லுக்மான் தனது மகனுக்குச் செய்த உபதேசம் நினைவை விட்டு அகலாத உபதேசம்.....

31:13. இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).
31:14. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

இஸ்லாத்தின் அடிப்படையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் வழிமுறைகள் தொடரும் ........

உங்கள் சகோதரி
பஸ்மின் கபீர்

.பாகம் --02

இஸ்லாத்தின் அடிப்படையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் வழிமுறைகள் .பாகம் - 02